Wednesday, October 6, 2010

காதல் தேவதை

இன்னும் கொஞ்ச நேரம்
இருந்து விட்டுப் போயேன்.

காதல் தேவதையைத்
தேடாதீர்கள்,
அவள் இங்கே
என்னுடன் இருக்கிறாள்
என்று சொல்லிவிட்டேன்,

உனக்காகக் காத்திருப்பவர்களிடம்.
----------------------------------------------------------------
ஒன்றிரண்டு முத்துக்களே உதிர்ந்து கிடக்கின்றன.
உன்னிருக்கையைச் சுற்றிலும்.

சிரிக்கும் போது
இதழ் பொத்தாதேயேன் ப்ளீஸ்

---------------------------------------------------------------------
உன்
உறக்க வேளையில்
உன் கனவுகளைக்
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் நான்...

என்னையும்
உள்ளே
அழைத்துச்செல்லும்படி...
----------------------------------------------------------------
ரொம்பவும்
நல்ல பையன்தான் நான்

உன்னைப்
பார்க்காதபோது மட்டும்.
----------------------------------------------------------------

Monday, September 27, 2010

ஆசைப் பூனை

(2010 செப்டம்பர் 13-ம் தேதியன்றைய உயிரோசை டாட் காமில் வெளியான கவிதை இது)
---------------------------------



















குறுக்கே போனால் அபசகுனம்,
ஒற்றை ரோமம் உதிர்ந்தால்
ஓராயிரம் பவுன்தான் மாற்று...
என்ற எச்சரிக்கைகள் மீறிய ஆசைதான்
பூனை வளர்க்க.
இடமில்லை, நேரமில்லை எனப்புலம்பி
அடுக்ககத்தில் பூனை வளர்க்க
அனுமதி தராத ஹவுஸ் ஓனரை
அவசரமாய்ச் சபித்தபடி,
"வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்"
ஈ பேப்பரில் பாரதியின்
கவிதை மட்டும் படித்துவிட்டு
பூனை ஆசைகள் மறைக்க முற்படினும்
டெஸ்க்டாப்பில் வாலாட்டி,
விண்டோஸின் ஸ்க்ரீன் பிறாண்டி,
அங்க சேஷ்டைகள் ஆயிரம் செய்து
அங்குமிங்கும் குதித்தோடும்
பப்பி அனுப்பிய
ஃப்ளோரசன்ட் பூனைக்குட்டிகள்
மூன்றை வைத்துத்தான்
கழிகிறது இப்போதைய பொழுது.
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------

Saturday, September 18, 2010

கறுக்கும் தாஜ்மகால்!

(யூத்ஃபுல் விகடனில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான கவிதைகள் இவை.)
* * * * * * * * * * * * * * * * * *
சிரிக்காதேயேன்
ப்ளீஸ்..!

நீ சிரிக்கையில் சிந்தி விடப்போகின்றன
உன் இதழ் முழுவதும் காத்திருக்கும்
எனக்கான முத்தங்கள்...

உன்னைச் சிரிப்பூட்டவும்
பயமாயிருக்கிறது எனக்கு

* * * * * * * * * * * * * * * * * *

17 முறை
படையெடுத்துத் தோற்றாலும்
கடைசிப் போரில்
வென்றவன் தான் கஜினி

உன்
காதலைப் பொறுத்தவரை
நான்
கஜினி வம்சம்


* * * * * * * * * * * * * * * * * * *

அப்படிப் பார்க்காதேயேன்
ப்ளீஸ்...

உன்னை தரிசிப்பதை
விட்டுச் சாக
விருப்பமில்லை எனக்கு!



** * * * * * * * * * * * * * * * * *

தாஜ்மகால்
மெல்ல மெல்ல
கறுத்து வருகிறதாமே...

வருத்தப்படுகிறார்கள்
சுற்றுச்சூழலியளாளர்கள்

நல்ல வேளை
உன்னைத் தாஜ்மகால்
பார்க்கவில்லை

பார்த்திருந்தால்
வெட்கப்பட்டு
உடனே கறுத்திருக்கும்!

* * * * * * * * * * * * * * * * * * *

------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
------------------------------------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
------------------------------------------------------------

Friday, September 17, 2010

காதல் கவிதைகள்

("காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்" என்ற தலைப்பில் யூத்ஃபுல் விகடனில் 2009 நவம்பர் மாதம் வெளியான கவிதைகள் இவை. )
--------------------------
எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்

சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?
--------------------------
கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?

உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...
--------------------------
என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...
--------------------------
உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.
--------------------------
விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு
----------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

Saturday, September 11, 2010

பதில் - தேஜூ உஜ்ஜைன் கவிதைகள்

(யூத்ஃபுல் விகடனில் 2009 அக்டோபர் மாதம் வெளியான கவிதைகள் இவை. )
-----------------------
பதில்

தினக்கடன் நாளாந்த
அலுவல் முடித்து
மதிய உணவைக் காவு கொடுத்து
தேத்தண்ணீர் மட்டுமருந்தி

இலக்கதனைத் எட்ட முயன்று
பரையேற்றம் செய்து காட்டி
கோப்புகள் மாற்றி
மின்னஞ்சல் எறிந்து
மடிக்கணிணி மூடி
அலுவலகக் கணிணி அணைத்து

விற்பனையே முதன்மையென்று
குறிவைத்துக் குதறும்மேலாளனைச் சபித்து
உளைவெடுக்கும் தலைகுனிந்து
பணிமனை வெளியேறி

வீடேக யத்தனிக்கும்
மழைநாளொன்றின்
அகால வேளையில்
பசியென்று கைநீட்டும்
சாலையோரக் கிழவிக்கு
என்னவென்று பதிலிறுக்க?
-----------------------
வாசனை

ஊதுபத்தி விற்பவன்
சென்று விட்ட பின்பும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவனின் ஏழ்மை வாசனை
-----------------------
உன்னழகு

நீ
அழகு பார்த்த
அந்தக் கணத்தில்..
உறைந்து போனது
என் வீட்டு
ஆளுயரக் கண்ணாடி.

இப்போது
வேறொன்றையும்
பிரதியெடுக்க
மறுக்கிறது அது.

கிட்ட நின்று
என் முகம் பார்க்க
யத்தனித்தால்
"ச்சீ! போடா"
என்கிறாய் நீ
கண்ணாடியுள்ளிருந்து..
-----------------------
என்னைக் கொஞ்சம்

கண்காட்சிக் கூட்டத்தில்
தொலைந்துபோய்
மீண்டும் கிடைத்த
குழந்தையாய் மாறிப்போகிறேன் நான்

எனைவிட்டு அங்குமிங்கும்
சுற்றியலைந்த உன் கண்கள்
என்மேல் வந்தமரும் போது
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------