Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, January 8, 2012

நீல ரோஜா

நீல உடை அணிந்திருக்கிறாள் காதலி... கவிதை வாசிக்கிறான் காதலன்...



--------------------------

ஒவ்வொரு முறை
உனைக்காணும் போதும்
உனை வியாபித்திருக்கும் நீலம்
ஏனோ அழுத்தமாய்
நினைவுறுத்துகிறது
என்னுள் உன் இருப்பை
--------------------------
நீல நிறம் அணிவோர்
மெத்தப் படித்தோராயிருப்பராம்
காதல் உணர்வு மிகுந்திருப்பராம்
காய்ச்சலைக் குறைப்பதில் கூட
நீல நிற உடை
வேகமாகச் செயல்படுமாம்
--------------------------
நவி அவதார்....
நீள்கடல், நீர் மூலம்....
நர்ஸ் எனும் தாதி....
நீல வான் ஆகாயம்....
நல்குலத்தோன் இராமன்...
நங்கையர்தம் மனம்திருடும்
கள்வன் கண்ணன்.... என
நீலத்தின் உதாரணம்
சொல்ல குறையவா செய்கிறது??
--------------------------
நீல ரோஜா ஒன்றிருந்தால்
நிரம்ப மகிழ்ச்சியுடன்
நினக்குப் பரிசளிப்பேன்
நீயெனக்கு வேண்டுமென்ற
நீங்காத கோரிக்கையோடு



--------------------------

Sunday, January 23, 2011

தாயற்றவனின் பசி




















எரிந்து விழுகிறான்
திமிர் பிடித்தவன் எனாதீர்கள்
கேக்க ஆளில்லை குடுத்து வச்சவன்
என்றுரைக்காதீர்கள்
ஹோட்டல் சாப்பாடு மூணு வேளையும்
என பொறாமைப்படாதீர்கள்
Solitude is bliss - தனிமை ஒரு வரமென
பழமொழி பகன்று கடுப்பேற்றாதீர்கள்

காதலியற்ற அவனின் தனிமைப்பொழுதுகள்
எப்படிக் கழிகின்றனவென்று யோசியுங்கள்
ரமணன் எதிர்பார்க்கா கனமழை நேரத்தில்
எங்கிருப்பானவன் என எண்ணிப்பாருங்கள்
உணவகமில்லா வறண்ட பகுதியில் சுற்றுகையில்
பசிதோன்ற யாரையழைப்பான் என யோசியுங்கள்

தாயில்லாப்பிள்ளையென இரக்கமும் காட்டாதீர்கள்
முடிந்தாலொரு ஞாயிறு வீட்டுக்கழையுங்கள்
நலமேதானென்றாலும், நலம் உசாவுங்கள்
போலியாகவேனும் பாசம் காட்டி
கொஞ்சமே கொஞ்சமாய் ரசம் சாதம் போடுங்கள்
ஊறுகாயும் புளித்த மோர்சாதமும் இருந்தாலும் நன்றே....

தலைவாழை இலையும், எட்டுப்பத்து கறிகளும்,
தலப்பாகட்டு பிரியாணியும் தந்த சந்தோஷத்தை
நெஞ்சில் கசியும் நன்றியை, அவனின்
பார்வையில் பொங்கும் பாசத்தை
கவனிக்கத் தவற மாட்டீர்கள் நீங்கள்...
---------------------------

Wednesday, October 6, 2010

காதல் தேவதை

இன்னும் கொஞ்ச நேரம்
இருந்து விட்டுப் போயேன்.

காதல் தேவதையைத்
தேடாதீர்கள்,
அவள் இங்கே
என்னுடன் இருக்கிறாள்
என்று சொல்லிவிட்டேன்,

உனக்காகக் காத்திருப்பவர்களிடம்.
----------------------------------------------------------------
ஒன்றிரண்டு முத்துக்களே உதிர்ந்து கிடக்கின்றன.
உன்னிருக்கையைச் சுற்றிலும்.

சிரிக்கும் போது
இதழ் பொத்தாதேயேன் ப்ளீஸ்

---------------------------------------------------------------------
உன்
உறக்க வேளையில்
உன் கனவுகளைக்
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் நான்...

என்னையும்
உள்ளே
அழைத்துச்செல்லும்படி...
----------------------------------------------------------------
ரொம்பவும்
நல்ல பையன்தான் நான்

உன்னைப்
பார்க்காதபோது மட்டும்.
----------------------------------------------------------------

Monday, September 27, 2010

ஆசைப் பூனை

(2010 செப்டம்பர் 13-ம் தேதியன்றைய உயிரோசை டாட் காமில் வெளியான கவிதை இது)
---------------------------------



















குறுக்கே போனால் அபசகுனம்,
ஒற்றை ரோமம் உதிர்ந்தால்
ஓராயிரம் பவுன்தான் மாற்று...
என்ற எச்சரிக்கைகள் மீறிய ஆசைதான்
பூனை வளர்க்க.
இடமில்லை, நேரமில்லை எனப்புலம்பி
அடுக்ககத்தில் பூனை வளர்க்க
அனுமதி தராத ஹவுஸ் ஓனரை
அவசரமாய்ச் சபித்தபடி,
"வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்"
ஈ பேப்பரில் பாரதியின்
கவிதை மட்டும் படித்துவிட்டு
பூனை ஆசைகள் மறைக்க முற்படினும்
டெஸ்க்டாப்பில் வாலாட்டி,
விண்டோஸின் ஸ்க்ரீன் பிறாண்டி,
அங்க சேஷ்டைகள் ஆயிரம் செய்து
அங்குமிங்கும் குதித்தோடும்
பப்பி அனுப்பிய
ஃப்ளோரசன்ட் பூனைக்குட்டிகள்
மூன்றை வைத்துத்தான்
கழிகிறது இப்போதைய பொழுது.
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------

Saturday, September 11, 2010

பதில் - தேஜூ உஜ்ஜைன் கவிதைகள்

(யூத்ஃபுல் விகடனில் 2009 அக்டோபர் மாதம் வெளியான கவிதைகள் இவை. )
-----------------------
பதில்

தினக்கடன் நாளாந்த
அலுவல் முடித்து
மதிய உணவைக் காவு கொடுத்து
தேத்தண்ணீர் மட்டுமருந்தி

இலக்கதனைத் எட்ட முயன்று
பரையேற்றம் செய்து காட்டி
கோப்புகள் மாற்றி
மின்னஞ்சல் எறிந்து
மடிக்கணிணி மூடி
அலுவலகக் கணிணி அணைத்து

விற்பனையே முதன்மையென்று
குறிவைத்துக் குதறும்மேலாளனைச் சபித்து
உளைவெடுக்கும் தலைகுனிந்து
பணிமனை வெளியேறி

வீடேக யத்தனிக்கும்
மழைநாளொன்றின்
அகால வேளையில்
பசியென்று கைநீட்டும்
சாலையோரக் கிழவிக்கு
என்னவென்று பதிலிறுக்க?
-----------------------
வாசனை

ஊதுபத்தி விற்பவன்
சென்று விட்ட பின்பும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவனின் ஏழ்மை வாசனை
-----------------------
உன்னழகு

நீ
அழகு பார்த்த
அந்தக் கணத்தில்..
உறைந்து போனது
என் வீட்டு
ஆளுயரக் கண்ணாடி.

இப்போது
வேறொன்றையும்
பிரதியெடுக்க
மறுக்கிறது அது.

கிட்ட நின்று
என் முகம் பார்க்க
யத்தனித்தால்
"ச்சீ! போடா"
என்கிறாய் நீ
கண்ணாடியுள்ளிருந்து..
-----------------------
என்னைக் கொஞ்சம்

கண்காட்சிக் கூட்டத்தில்
தொலைந்துபோய்
மீண்டும் கிடைத்த
குழந்தையாய் மாறிப்போகிறேன் நான்

எனைவிட்டு அங்குமிங்கும்
சுற்றியலைந்த உன் கண்கள்
என்மேல் வந்தமரும் போது
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------