Saturday, December 31, 2011

காதல் வந்து விட்டது எனக்கு

கொஞ்சமேனும்
புன்னகைத்து விட்டுப் போ

ஊழிக்காலத்திற்கென
சற்று சேமித்து வைத்துக்கொள்கிறேன்
நான்.

----------------------------------------------------------------

பரவாயில்லை

காலம் காலமாகி வரும்
கல்லறை முடிவு தானே காதலுக்கு

சரி விடு...
ஒன்றிரண்டு கவிதைகளேனும்
தேறுமா பார்க்கிறேன்..

----------------------------------------------------------------

மற்ற எல்லாவற்றையும் தூக்கி உடைப்பில் போடு
காதல் வந்து விட்டது எனக்கு



----------------------------------------------------------------

முத்தங்களின் பழக்கூடையை
கைப்பற்றிவிட்டான்
பழநிபாரதி

கொஞ்சல்வழிக்கல்வியிலும்
சேர்ந்து விட்டான் தபூசங்கர்

எனக்காக ஏதேனும்
மிச்சமிருக்கிறதாவெனத் தேடுகிறேன் நான்.

----------------------------------------------------------------

ஏனிப்படி மாறிப்போனேனென
ஆச்சரியமாய்த்தானிருக்கிறது..

காதலெனும் கிறுக்குத் தனம்
என்னுள்ளும் வருமோவென
உன்னிடமே வினவியவன் நான்..

ஆனால் இனியும் உனை மறக்க
என்னாலாகுமோவென
என்னிடமே வினவுகிறேன் இன்று..

----------------------------------------------------------------

உன் முகம் மோதித்தவழும்
சூரியக் கதிரின்
ஒளிக்கற்றையுனை
விருது பெற்ற
புகைப்படமாய்
மாற்றத் தலைப்படுகிறது

----------------------------------------------------------------

முகமகிழ்ச்சியாய்க்
காண ஆசையாயிருக்கிறதெனக்கு
உன் அகமகிழ்ச்சியை

----------------------------------------------------------------

Thursday, February 24, 2011

நீ......















உன் அழகு நாசி விட்டு
வெளிவர மனமின்றி
உன்னுடனே தங்கிவிட்டது
நீ உள்ளிழுத்த காற்று...

"பணி மொழி வாலெயிறு ஊறிய நீர்"
தாகம் தீர்க்கும்
தன் கடன் மறந்து
வள்ளுவன் கூற்றாய்
உன் இதழ்க்கடை புகுந்தது நீர்.

நிலவினை முகத்திற்கும்
நட்சத்திரங்களை பற்களுக்கும்
தாரை வார்த்துவிட்டு
உன் கண்களில்
தஞ்சம் புகுந்தது ஆகாயம்..

வெம்மையைக் குறைத்து
உன் தேகமெங்கும் விரவி
இளஞ்சூடாய்க்
கதகதக்கிறது அக்னி...

தன்னுள் நீ கலக்கும்
கொடுமை வேண்டாமென்று
உன்னுள் கலந்து
ஊமையாகிப்போனது நிலம்...

கூடவே

நானும்...

Tuesday, February 15, 2011

காதல் - ஒரு குறைப் பிரசவக் குழந்தை




என் காதல்
ஒரு குறைப் பிரசவக் குழந்தை,

குழந்தை பிறக்கக் குறைந்தது
250 தினங்களேனும் வேண்டுமாம்.

ஆனால் உன்னைக் கண்டதும்
என் காதல் பிறந்து விட்டதே...

----------------

நீ
என்னிடம் பேசுவதை
உன் உதடுகளால்
தாங்க முடியவில்லையாம்.

நீ
என்னிடம் பேசும்
அந்த நேரத்தில்
அவை பிரிந்திருக்கின்றனவாம்.

என் உதடுகளை
சந்திக்கும் போது
அவை சொல்கின்றன.

ஆயினும்
அவற்றுக்குத் தெரியும்.........
இருவராய்ச் சந்திப்பதை விட
நால்வராய் சந்திப்பதே
இன்பம் என்று.

அதற்கான நன்றியையும்
சேர்த்தே சொல்கின்றன..

நீ என்னிடம் பேசிக்கொண்டே இரேன்
உன் உதடுகளை வம்பிழுக்க ஆசை.

----------------

ஒருநாள்
உன்னை நான் காதலிப்பதாகக்
காதலிடம் சொன்னேன்

உனைக்கண்டு விட்ட அது
என்னிடம் ஒத்துழைக்க மறுத்து விட்டது

காதலே உன்னைக்காதலிக்கிறதாம்.

----------------

Monday, February 14, 2011

ஃபீனிக்ஸ் ஜாதி (கவிதைகள்)


ஒரு வகையில்
ஃபீனிக்ஸ் ஜாதி தானோ
இந்தக் காதல்?
உதாசீனங்களைத் தாண்டியும்
இன்னும் இளமையாகவே
உயிர்த்தெழுந்து காத்திருக்கிறது
தனக்கான துணைக்காக.......
-------------------------------
எனக்கே எனக்கானவள் இவள்
என்றிருந்த போது
கவிதைகளால் குளிப்பாட்டினேன் அவளை..
அவள் ச்சோ...... ச்வீட் எனும்போது
கவிதை ச்சோ...... ச்வீட்டாவே இருந்தது..
அவளது விழியீர்ப்பு விசை
நோக்குமிடம் நானில்லை
என்று அறிந்த பிறகும்.....
அவளுடனான காதல்
இருக்கிறதா இல்லையாவென
யோசிக்கும் நேரத்திலும் வந்து
கவிதை கேட்கும் இவளை என்ன செய்வது?
-------------------------------
ரசிக்கப்படுகின்றன என்பதற்காகவே
உருவாக்கப்படுகின்றன பொய்கள்
அவள் ரசனைக்காக
என்னிடமிருந்து கொஞ்சம்...
பிழைத்துப்போகட்டும்
காதல்
-------------------------------
உற்சாகம் பொங்கும் மனதின்
மோன நிலை பிதற்றல்கள்
உண்மையல்லவென்று
பிதற்றுபவளுக்குத் தெரியாமலிருக்கலாம்..
செவிமடுப்பவன் செவிடனல்லவே.....
-------------------------------

Sunday, January 23, 2011

தாயற்றவனின் பசி




















எரிந்து விழுகிறான்
திமிர் பிடித்தவன் எனாதீர்கள்
கேக்க ஆளில்லை குடுத்து வச்சவன்
என்றுரைக்காதீர்கள்
ஹோட்டல் சாப்பாடு மூணு வேளையும்
என பொறாமைப்படாதீர்கள்
Solitude is bliss - தனிமை ஒரு வரமென
பழமொழி பகன்று கடுப்பேற்றாதீர்கள்

காதலியற்ற அவனின் தனிமைப்பொழுதுகள்
எப்படிக் கழிகின்றனவென்று யோசியுங்கள்
ரமணன் எதிர்பார்க்கா கனமழை நேரத்தில்
எங்கிருப்பானவன் என எண்ணிப்பாருங்கள்
உணவகமில்லா வறண்ட பகுதியில் சுற்றுகையில்
பசிதோன்ற யாரையழைப்பான் என யோசியுங்கள்

தாயில்லாப்பிள்ளையென இரக்கமும் காட்டாதீர்கள்
முடிந்தாலொரு ஞாயிறு வீட்டுக்கழையுங்கள்
நலமேதானென்றாலும், நலம் உசாவுங்கள்
போலியாகவேனும் பாசம் காட்டி
கொஞ்சமே கொஞ்சமாய் ரசம் சாதம் போடுங்கள்
ஊறுகாயும் புளித்த மோர்சாதமும் இருந்தாலும் நன்றே....

தலைவாழை இலையும், எட்டுப்பத்து கறிகளும்,
தலப்பாகட்டு பிரியாணியும் தந்த சந்தோஷத்தை
நெஞ்சில் கசியும் நன்றியை, அவனின்
பார்வையில் பொங்கும் பாசத்தை
கவனிக்கத் தவற மாட்டீர்கள் நீங்கள்...
---------------------------