Sunday, January 23, 2011

தாயற்றவனின் பசி




















எரிந்து விழுகிறான்
திமிர் பிடித்தவன் எனாதீர்கள்
கேக்க ஆளில்லை குடுத்து வச்சவன்
என்றுரைக்காதீர்கள்
ஹோட்டல் சாப்பாடு மூணு வேளையும்
என பொறாமைப்படாதீர்கள்
Solitude is bliss - தனிமை ஒரு வரமென
பழமொழி பகன்று கடுப்பேற்றாதீர்கள்

காதலியற்ற அவனின் தனிமைப்பொழுதுகள்
எப்படிக் கழிகின்றனவென்று யோசியுங்கள்
ரமணன் எதிர்பார்க்கா கனமழை நேரத்தில்
எங்கிருப்பானவன் என எண்ணிப்பாருங்கள்
உணவகமில்லா வறண்ட பகுதியில் சுற்றுகையில்
பசிதோன்ற யாரையழைப்பான் என யோசியுங்கள்

தாயில்லாப்பிள்ளையென இரக்கமும் காட்டாதீர்கள்
முடிந்தாலொரு ஞாயிறு வீட்டுக்கழையுங்கள்
நலமேதானென்றாலும், நலம் உசாவுங்கள்
போலியாகவேனும் பாசம் காட்டி
கொஞ்சமே கொஞ்சமாய் ரசம் சாதம் போடுங்கள்
ஊறுகாயும் புளித்த மோர்சாதமும் இருந்தாலும் நன்றே....

தலைவாழை இலையும், எட்டுப்பத்து கறிகளும்,
தலப்பாகட்டு பிரியாணியும் தந்த சந்தோஷத்தை
நெஞ்சில் கசியும் நன்றியை, அவனின்
பார்வையில் பொங்கும் பாசத்தை
கவனிக்கத் தவற மாட்டீர்கள் நீங்கள்...
---------------------------

4 comments:

  1. மிக அருமையான கவிதை.

    ReplyDelete
  2. பத்து தினங்கள் கழித்தா கமெண்டை வெளியிடுவது:)??
    அடுத்த கவிதை எப்போது?

    ReplyDelete
  3. தாமதத்திற்கு மன்னிக்கவும்,
    அடுத்த கமெண்டும் மிகத் தாமதமாகவே...

    ReplyDelete
  4. இதோ இன்றே அடுத்த கவிதை

    ReplyDelete